ஏன் செய்தேன்னு சொல்லவா? எப்படிச் செய்தேன்னு சொல்லவா” பார்த்திபன் போலீஸிடம் கேட்கும் வசனம் இது. படம் முடியும் போது நம் மனதில் இந்தப்படத்தை பார்த்திபன் ஏன் எடுத்தார் என்பதற்கான பதிலும் எப்படி எடுத்தார் என்பதற்கான பதிலும் கிடைக்கும். படத்தில் ஒரே நடிகர், அவர் தான் தயாரிப்பாளர். அதனால செலவே கிடையாது. விருதும் வாங்கிடலாம் என்று ஈசியாக சொல்லிட முடியாத அசுர உழைப்பை கொடுத்திருக்கிறார் பார்த்திபன்.
காவலர்களிடம் அவர் சொல்லும் வாக்குமூலத்தில் ஆரம்பிக்கிறது கதை. ஒருகொலையை அவர் செய்ததாக போலீஸ் முடிவு செய்ய, மேலும் சில கொலைகளைத் தானே செய்ததாக சொல்கிறார். கொலைகளை ஏன் செய்தார் என்பதை வெறும் வாய்மொழியாகச் சொல்லி, அவர் சொல்லும் கதைகளை நம்மையே இயக்குநராக மாற்றி விஷுவல்ஸை கற்பனை செய்ய வைத்துள்ளார் பார்த்திபன்.
“பீச்ல என் கண்ணைக்கட்டி என்ன கண்டுபிடி மாமான்னு அவ சொன்னா” இதைப் பார்த்திபன் சொல்ற உணர்வுல கடற்கரை நம் கண் முன்னாடி வந்து அலையாடுது. காட்சிகளால் ஆன கதைகளுக்கு மத்தியில், ஒரு கதையில் நம்மை காட்சிகளை உருவாக்கச் செய்த விதத்திலே ஒத்த செருப்பு இமலாய இலக்கைத் தொட்டிருக்கிறது.
ஒரு உருக்கமான கதையைச் சொல்லிக்கொண்டிருக்கும் போதே டக்குன்னு வேறோர் உணர்வுக்கு மாறும் மனநிலை கொண்ட கேரக்டரை சிறப்பாக செய்திருக்கிறார் பார்த்திபன். படத்தில் ஏனைய கேரக்டர்கள் எல்லாம் வெறும் குரல்களாகவே தான் வரும். ஆனால் அந்தக் கேரக்டர்களும் அவ்வளவு அழுத்தத்தைத் தரும். இது நார்மல் படத்திற்கான கதைதான். இதை ஏன் இவரு ஒண்டியா நடிச்சி வம்படியா சாதிக்கணும்னு ஒரு விமர்சனம் வைக்கலாம். பட் பலர் நடிக்கிற கதையில ஒத்தையா நடிக்கிறது பெரிய பவர் இல்லயா?
ஜன்னல் கம்பிகள், நாற்காலி, கேஸ்பைல், உஷாபேன் என பல அஃறிணைகளும் படத்தில் பார்த்திபனோடு அணி சேர்ந்து நடித்துள்ளன. அவையெல்லாம் தரும் உணர்வுக்குள் சிம்மாசனம் போட்டு இருக்கிறார் சவுண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டி. அடடா அட்டகாச பணி அது. சத்யா பார்த்திபனின் ஒவ்வொரு வசனத்திற்கும் ஒவ்வொரு மாதிரியான இசையைத் தந்து படம் முடிந்த பின்னும் இசை பற்றி அசைபோட வைக்கிறார்.
பார்த்திபன் எழுதும் வசனங்களும், எழுதியதை அவர் பேசும் விதமும் எப்போதும் அழகு தான். ஒத்த செருப்பையும் அழகாக எழுதி இருக்கிறார். ஒத்த செருப்பிலும் எழுத முடியும் என்று நிரூபித்து இருக்கிறார். சம்பாதிக்கும் நிலை கடந்து சாதிக்கும் நிலைக்கு வந்துவிட்ட பார்த்திபனின் சாகசப்பயணம் இந்த ஒத்த செருப்பு.