Tamil Movie Ads News and Videos Portal

உறியடி 2 விமர்சனம்

ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிக்கிறது ஒரு ரகம். ஒரு மாங்காவை வச்சி ஒரு மாமரத்தையே உலுக்கிறது இன்னொரு ரகம். உறியடி2 இரண்டாவது ரகம்.

உறியடி என்ற முதல் பட தலைப்பை வச்சி இரண்டாவது பாகத்துல அரசியல், ஸ்டெர்லைட், சாதி அமைப்புத் தலமை, கார்ப்பரேட் கிரிமினல் உள்பட எல்லாத்தையும் அடிச்சி நொறுக்கி இருக்கிறார் இயக்குநரும் ஹீரோவுமான விஜய்குமார்.

முதல்பாகம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தியேட்டருக்குள்ள போன ரசிகர்களை இன்ப அதிர்ச்சில திக்குமுக்காட வச்சி அனுப்பிச்சிது. அதனாலே இரண்டாம் பாகத்துக்கு ஏக எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்பில் பின்பாதியில் இடர் வந்தாலும் படம் முடியும் போது ஒளிர வச்சிடுது.

தான் வேலை செய்ற ஆலையில் கெமிக்கல் கழிவு, விஷவாயு போன்ற பகீர் விசயங்கள் விஜய்குமாருக்கு தெரியவர, வேலையை உதறிட்டு ஆலைக்கு எதிரா கருங்கொடி தூக்குறார். அந்தக் கருங்கொடி வெறுங்கொடி ஆகுதா? வெற்றிக்கொடி ஆகுதா? என்பது திரையில்.

படம் துவங்கும் போதே கதையோடு துவங்கி விடுவதால் படத்தில் இயற்கைத் தன்மை இயல்பாகவே வந்துவிடுகிறது. சின்ன காதல் போர்ஷன், நட்பு போர்ஷன் என அழகாக நகர்ந்து வரும் படம் ஆலையில் இருந்து விஷவாயு வெளியேறும் காட்சியில் நம் மூச்சையும் வேகமாக வெளியேறி வெளியேறி உள்ளேற வைக்கிறது.

பாரதியின் கோப வார்த்தைகளுக்கு ஏற்ற முகமும் உடல்மொழியும் விஜய்குமாருக்கு. அலட்டிக்காமல் நடித்திருக்கிறார். குறிப்பாக ஒரு காட்சியில் போலீஸார் “டேய் இங்க வாடா” எனும்போது, “என்னடா” என்ற திமிர் காட்டுவது சூப்பரப்பு. மேலும் சகலக் கதாபாத்திரங்களும் சளைக்காமல் நடித்து உறியடிக்கு படி அமைத்து இருக்கிறார்கள்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்சனையை ஞாபகப்படுத்தும் காட்சிகளில் எல்லாம் கனல். ஆளும் வர்க்கம் தன்னை தக்க வைக்க என்னவெல்லாம் செய்யும் என்பதை தோல் உரிக்கும் இடமெல்லாம் தனல்.

குறிப்பாக சாதிப்பெயரைச் சொல்லி கல்லா கட்டும் சாதித்தலைவர்களை (படத்தில் உள்ள சாதித்தலைவர்களை)காறி உமிழ்ந்துள்ள இடம் சுழல்.

ஒரு கார்ப்பரேட் கெமிக்கல் ஆலைக்கு உரிமம் வழங்குவதிலும் அதைக் காப்பாற்றுவதிலும் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் எப்படிக் கூட்டணிப் போடுகின்றன என்பதையும் துணிச்சலாகச் சொல்லி அடித்திருக்கிறார்கள்.

நிறைகளை அடுக்கும் போது சின்னச்சின்ன குறைகளும் எட்டிப்பார்க்கவே செய்கின்றன. முன்பாதியில் இருந்த நேச்சுரல் பின்பாதியில் வழுக்கி சற்று ஹீரோயிச கமர்சியலுக்குள் அடியெடுத்து வைக்கிறது. அம்மாம் பெரிய தில்லாலங்கடி வில்லன் கோஷ்டிவளை அவ்வளவு எளிதாகப் போட்டுத் தள்ளிர முடியுமா? என்னதான் கதை சொல்லலில் தனி சுவாரசியம் காட்டினாலும் திமிரு எழு, திருப்பி அடி, போராடு என்று ஏற்கெனவே முன்னவர்கள் சொன்னவற்றையே தான் சொல்லி இருக்கிறது படம்.

ஒரு ஆலையில் பிரச்சனை வரப்போகுது என்றால் அதை எஸ்.எம்.எஸ் மூலம் மக்களுக்குத் தெரியபடுத்துங்கள். விஷவாயு தாக்கிய மக்களுக்கு எந்தமாதிரியான மருந்து கொடுக்க வேண்டும் என்பதற்கு முன் அந்த விஷவாயுவின் தன்மை என்ன என்பது மருத்துவர்களுக்கும் மருத்துவ ஊழியர்கள் அனைவருக்கும் தெரியவேண்டும். அதை ஆலைய நிர்வாகம் சொல்வதில்லை. இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம். அந்த வாயுவின் தன்மை வெளியில் யாருக்கும் தெரிந்து விடாதபடி காக்கும் தந்திரம் எவ்வளவு அற்பத்தமானது என்பதையெல்லாம் திரையில் காட்டி விழிப்போடு இருங்கள் என்ற எச்சரிக்கை மணியை அடித்ததிற்காகவே உறியடி2-வை உச்சி முகரலாம்.