யூ கோவை யூ கோ என்று விரட்டாவிட்டால் வாழ்க்கை அலங்கோலமாகி விடும் என்பதையும், அன்பு வெறுப்பாக மாற காரணமே ஈகோ தான் என்பதையும் சொல்ல வரும் படம் இரா இரா.
படம் தாங்கி நிற்கும் கருத்தியலை விட படத்தில் தேவையே இல்லாத காட்சிகள் பெருங்கோபத்தை உண்டுபண்ணுகிறது. “கஞ்சா அடி, காதலியை போய் குத்து” என்று இயக்குநர் எடுத்துக் கொடுக்கிறார். இப்படியான பொல்லாத காட்சிகள் தான் பொள்ளாச்சி சம்பவங்கள் அரங்கேற வழிவகுக்கின்றன. வெறுப்பைச் சுமக்காதே என்று சொல்ல வரும் படத்தில் இப்படியான பொறுப்பற்ற காட்சிகளைத் தவிர்த்திருக்கலாமே?
ஹரிஷ்கல்யாணுக்கு ஆக்ஷன் ஹீரோவாக மாறுவதற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துள்ளது இப்படம். நடிக்கும் போதும் அடிக்கும் போதும் ஈர்க்கிறார் ஹரிஷ். அவரை அசால்டாக விஞ்சி விடுகிறார் நாயகி ஷில்பா மஞ்சுநாத். கவுதம் கவுதம் என்று உருகும் போது நம் மனதை நைசாக உருவி விடுகிறார். பொன்வண்ணன் மா.கா.பா பால சரவணன் படத்திற்குள் நல் வரவாகவும் இல்லை. தொந்தரவாகவும் இல்லை.
பின்னணி இசையும் பாடல்களும் தான் படத்தை கொஞ்சமாவாது காப்பாற்றி இருக்கிறது. படத்தில் அவ்வளவு வெறுமை.
குறிப்பாக பின்பாதியில் எல்லாம் பின்வாசல் வழியாக ஓடிப்போயிடலாமா? என்று தோணும் அளவில் சலிப்பு நிறைந்த காட்சிகள். எடிட்டர் கொஞ்சம் படத்தை சலித்து எடுத்திருக்கலாம் அய்யா.
சிறுவயதில் தன் தாய் அப்பாவையும் தன்னையும் அம்போ என விட்டுவிட்டு வேறு ஒருவருடன் ஓடிப்போய் விடுவதால் அந்த விரக்தியிலே ஹீரோ தன்மீது அன்பு வைப்பவர்களை சந்தேகமாகப் பார்க்கிறார். அப்படியானவருக்கு ஒரு காதலி கிடைத்தால்..அதுவும் மிக அழகான அன்பான பணக்கார காதலி கிடைத்தால், எங்கே இந்த உறவு போய்விடுமோ பயம் வருமல்லவா? வருவது இயல்பு தான். ஆனால் அதற்காக ஹீரோ செய்யும் காரியமெல்லாம் ஈமக்காரியம் போல துயரம் நிரம்பியவை.
“காதலிச்சா உடனே மேட்டர் பண்ணிரணும். அப்ப தான் பிரிஞ்சாலும் ஆம்பளைக்கி வலிக்காது” என்ற விசயத்தை ஓப்பனாகச் சொல்கிறார் இயக்குநர். சரி காமத்தின் நீட்சி தான் காதல் என்பதாக இருக்கட்டும். அது இயல்பாகவே நடக்க வேண்டும். நடக்கவும் செய்யும். ஆனால் திரையில் இந்தக் கருத்தை இப்படி அப்பட்டமாகத் திணித்தால் ஒரு பதினெட்டு வயது பையனுக்கு என்ன தோன்றும்?
இப்படியான வக்கிரத்தை எல்லாம் வாந்தி எடுத்து வைத்துவிட்டு, முடிவாக அன்பு செய்யுங்கள், அன்பானவர்கள் பிறரோடு சந்தோஷமாக இருந்தாலும் பொறாமை இல்லாமல் ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று சப்பைக் கட்டு கட்டுகிறார்கள். இது நியாயமா?