Tamil Movie Ads News and Videos Portal

இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு விமர்சனம்

சன்னிலியோன் சிஸ்டர் படத்தில் இருக்காப்ல என்ற எண்ணத்தோடு தியேட்டருக்குச் செல்பவர்களை கள் ஊற்றி அனுப்பும் படம். ‘வா’ என்று அணைத்து விமலை அந்தப்பெண் செய்யும் அதகளம் எல்லாம் இளசுகளுக்கு ராவில் வரும் சாந்தி, கல்ச்சர் காவலர்களுக்கு ராவா அடிச்ச வாந்தி.

கதை என்பதை கண்டுபிடிக்கவே இடைவேளை வரை தேவைப்படுவதால், விமல் செய்யும் ‘இடை’வேலைகளிலே கவனம் போய்த் தொலைக்கிறது. மீட்டர், மேட்டர், குவாட்டர் என்றலையும் விமல். யாராவது “தொட்டுத் தொலைங்கடா”என்றலையும் ஆஷ்னாசவேரி என மெயின் கதாபாத்திரங்களே மெயின் மேட்டர்களாக இருப்பதால் படத்தின் மெயின் மேட்டரே மேட்டர் தான் என்ற முடிவுக்கு நாம் வர வேண்டியுள்ளது.

முத்தத்தில் விமல் கமலுக்கு நிகரா..மொத்தத்தில் அவர் ஆம்பளைப் பிகரா? என்ற பட்டிமன்றம் வைக்கும் அளவில் அவர் பார்க்குற அத்தனை பேரையும் ஜொள்ளுகிறார். அவரைப் பார்க்குற கேரக்டர்களும் ஜொள்ளுகின்றன. இப்படியான படத்தைக் கொடுத்தால் பணத்தை அள்ளிவிடலாம் என்ற அக்கவுண்ட் டீடைல்ஸை தயாரிப்பாளருக்கு யார் சொன்னார்களோ தெரியவில்லை. தரமான சம்பவங்களுக்காக படத்திற்கு சரளமாக செலவு செய்திருக்கிறார். ஆஷ்னா விமலுக்கான ஒரு பாடலில் அத்தனை பிரம்மாண்ட அழகு. (கேமரா வொர்க்கைச் சொன்னோம்) சன்னிலியோன் சிஸ்டர் எனப்படும் மையா லியோனுக்கு சம்பளம் எவ்வளவு என்று தெரியவில்லை. மனுஷி கொடுத்ததிற்கு குறை வைக்காமல் கொடுத்திருக்கிறார். “எனக்கு விமல் மட்டும் இல்ல..சிங்கம்புலின்னாலும் ஓ.கே தான்” என்று அவர் தாராளம் காட்டும் ஒரு இடம் 45+களுக்கு வரம். குடும்பப் பாங்கான ஆஷ்னாசவேரி இதில் கருப்பட்டிப் பாகாக உருகி வழிந்து இருப்பது அவருக்கு யார் விட்ட சாபமோ? ஆனால் குறிப்பிட்ட டார்கெட் பார்வையாளர்களுக்கு அது கொடுப்பனை தான் போங்க.
பசங்க படத்தில் பசங்களோடு நடித்த விமல் பசங்க பார்க்க முடியாத (சின்னப் பசங்க) படத்தில் நடித்திருப்பதும் முரண். ஆனா இந்தப் படத்திற்கு அதுதானேப்பா அரண்.

கதைக்கு காட்சிகளை வைக்காமல் காட்சிகளை வைத்து கதையை ஓட்டி இருப்பதில் தான் படம் சிக்கலாகி விட்டது. முக்கலும் முணகலுமே படத்தின் அடிநாதமாக இருப்பதால் இதுபோன்ற சிக்கல்களை யாரும் கண்டுக்கிட மாட்டார்கள் என்று இயக்குநர் மெத்தனமாக இருந்துவிட்டார் போல. திரைக்கதையில் அவ்வளவு பலவீனம். படத்திற்கு டபுள்மீனிங் ஸ்ட்ரேட் மீனிங் வசனங்கள் தான் என்றான பிறகு அந்த வசனங்களையாவது கொஞ்சம் ஜாலியாக எழுதி இருக்கலாம். ஒன்றிண்டு டயலாக்ஸ் தவிர்த்து வேறு ஒன்றும் தேறவில்லை. ஆனந்தராஜ் மன்சூர் அலிகான் போன்ற அகசாய வில்லன்கள் எல்லாம் காமெடி செய்வதற்காக மல்லுக்கட்டுவதைப் பார்க்கும் போது மாடு இல்லாமல் ஜல்லிக்கட்டு விளையாட ஆசைப்படும் வீரர்கள் போல பாவமாக இருக்கிறது. சிங்கம் புலியும் விமலும் எத்தன் படத்தில் கலக்கி இருப்பார்கள். இதில் ஒரு சில இடத்தில் அதை டச் செய்து ஒப்பேத்தி இருக்கிறார்கள். விமலுக்கு எங்கு மச்சம் இருக்கிறது என்பதை ஒரு காட்சியில் ஜோசியர் மூலமாக விளக்கி “இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு” என்ற பட டைட்டிலுக்கு இயக்குநர் நியாயம் செய்திருக்கிறார். (அந்தத் தொழில் பக்திக்கு தலை வணங்குறோம்ங்க) ஆனால் சதைக்கு நியாயம் சேர்த்த புண்ணியத்தை கதைக்கும் சேர்த்திருந்தால் கில்மாவா இருந்தாலும் அட உடுமா என்று கூட்டம் கும்மும். இதற்கும் கூட்டம் கும்மலாம். ஏனென்றால் இதற்கென்றும் ஒரு கூட்டம் இருக்கும் தானே?