Tamil Movie Ads News and Videos Portal

இரண்டாம் குத்து படம் சம்பந்தமாக சில சந்தேகங்கள் குழப்பங்களை வெளிப்படுத்தி இருந்தேன் – சாம்ஸ்

“இரண்டாம் குத்து” இந்த படம் சம்பந்தமாக என்னை தெளிவுபடுத்திக் கொள்ளும் நோக்கத்தோடு என்னுடைய சில சந்தேகங்கள் குழப்பங்களை வெளிப்படுத்தி இருந்தேன்… அந்தப் பதிவிற்கு ஆதரவு எதிர்ப்பு என இரண்டும் இருந்தது. பலரும் சொன்ன கருத்துக்கள் என் நல விரும்பிகள் சொன்ன அட்வைஸ்களை வைத்து தற்போது என் கருத்தை என் முடிவை சொல்லவே இந்த பதிவு.

என் கருத்து
———————–
இதுபோன்ற அடல்ஸ் ஒன்லி சமாச்சாரங்கள் பாலிவுட் படங்களில் ஹாலிவுட் படங்களில் டிவிகளில் செல்களில் கம்ப்யூட்டர்களில் OTT தளங்களில் என தாராளமாக வந்து கொண்டிருக்கின்ற நிலையில் அதே போன்று ஒரு விஷயத்தை படமெடுத்து சென்சாரின் அனுமதியோடு வெளியிடுகிறேன். மற்றதையெல்லாம் பார்த்து அனுமதித்த , சிலநேரம் கண்டும் காணாமல் போகிற நீங்கள் என் படத்திற்கு மட்டும் ஏன் இத்தனை எதிர்ப்பு காட்டுகிறீர்கள் என்று இந்த படத்தை இயக்கி இயக்கிய சந்தோஷ் பி ஜெயக்குமார் கேட்டிருந்தார்.

அவன் செஞ்சா நீ செய்வீயா ? என்று மற்றவர்கள் போல் கேட்டுவிட்டு என்னால் போக முடியவில்லை… அவர் கைகாட்டும் காரணங்களும் திருந்த வேண்டும் என்று தான் நினைக்கிறேன். ஆனால் அதையெல்லாம் சரி செய்யும் பொருட்டு இதுவரை அதற்காக எந்த முயற்சியும் எடுத்ததில்லை. குரலும் கொடுத்ததில்லை. குறைந்தபட்ச ஒரு எதிர்ப்பு பதிவு கூட நான் போட்டதில்லை. மற்றவர்கள் செய்த தவறை இயக்குனர் சொல்வது போல் கண்டும் காணாமல் தான் போயிருக்கிறேன். அதை தாண்டி இவர் படத்தில் நடித்து வேறு இருக்கிறேன். அப்படி இருக்கையில் இவரை ஏன் இப்படி ஒரு படம் எடுத்தீர்கள் ? என்று கேள்வி கேட்கும் தகுதி அருகதை நேர்மை எனக்கில்லை என்றே நினைக்கிறேன்.

என் முடிவு
——————–
இதுவரை நான் நடித்த படங்களில் கண்ணியமாகவே நடித்திருக்கிறேன் . அதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பக்கூடிய ஒரு நடிகனாகவே இதுவரை இருக்கிறேன். இந்த மாதிரியான ஜானர் படங்கள் இப்பொழுது சகஜமாக தான் வருகிறதே அந்த வயது இளைஞர்களுக்கு தெரிந்த ஒரு விஷயத்தை ஜாலியாக காமெடியா செய்யப்போகிறோம்..
‘A’ படம் என்று சென்சார் சர்டிபிகேட்டோடு வரப் போகிறது இதில் என்ன இருக்கிறது? நடித்தால் என்ன ? என்று தான் இந்த படத்தில் நடித்தேன். ஆனால் இந்தப் படத்திற்கு இருக்கின்ற எதிர்ப்பை மனதில் கொண்டும் என் கண்ணியத்தை காப்பாற்றும் பொருட்டும், இதுபோன்ற படங்களுக்கு ஆதரவு இருக்கிறது என்றாலும் இனி “இரண்டாம் குத்து” போன்ற நேரடி அடல்ஸ் ஒன்லி படங்களில் நடிப்பதை தவிர்ப்பது என்று முடிவு எடுத்திருக்கிறேன்.
முதலில் என்னை மாற்றிக் கொள்கிறேன்…
தனிமனித ஒழுக்கமே சிறந்தது என்பது என் கருத்து .

அன்புடன்
சாம்ஸ்
?