போராயுதத்திற்கு எதிரான பேராயுதம் பேரன்பு தான் என்பதையும், மனிதனை வெல்வதை விட மனதை வெல்வது தான் கெத்து என்பதையும், முதலாளி வர்க்கம் என்பது எப்போதும் லாபத்தை மட்டுமே நோக்கும் என்பதையும் சமரசமின்றி பேசி இருக்கிறது இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு.
கடற்கரையில் கரை ஒதுங்கும் குண்டு ஒன்றிற்குப் பின்னால் பலகோடி ரூபாய் ஊழல் ப்ளான் இருக்கிறது. அக்குண்டு காதலியை கைப்பிடித்து சொந்தமாக லாரி வாங்கி செட்டில் ஆக நினைக்கும் நாயகன் பிடிக்குள் செல்ல..இறுதியில் குண்டு எப்படியெல்லாம் வெடிக்கிறது என்பதாக திரைக்கதை விரிகிறது.
பா.ரஞ்சித் இயக்கும் படங்கள் என்றால் இப்படித்தான் இருக்கும் என்ற பொதுப்புரிதலை அவர் தயாரிக்கும் படங்களுக்கும் பொருத்திப் பார்க்கிறது சமூகம். அதைப் பரியேறும் பெருமாள் மிக காத்திரமாக எதிர்கொண்டது. குண்டுவும் மிக அழகாக எதிர்கொண்டுள்ளது.
இந்தக் குண்டு சமகாலத்தில் தேவைப்படும் அரசியலை சமரசம் இன்றிப் பேசி இருக்கிறது. மனித மனத்தில் ஒரு துண்டு அன்பிருந்தால் போதும் இங்கு குண்டு போடத்தேவை இல்லை. சாதி, சுய கெளரவம் என்பது காதலுக்கு முன் புண்ணாக்கு சமாச்சாரம் என்கிறது குண்டு.
இந்தப்படத்தின் இசை நம் வாழ்வோடு இணைந்துள்ள ஒன்று என்பதால் டென்மாவை கொண்டாடத் தோன்றுகிறது. கிஷோரின் ஒளிப்பதிவும் ஆர்ட் டைரக்டர் ராமலிங்கம் செட் வொர்க்கும் பிரம்மிக்க வைத்துள்ளது.
கொஞ்சம் நீளமான முன்பாதியும், துருத்தி நிற்பது போல் தெரியும் காதல் காட்சிகளையும் தினேஷ் என்ற நடிப்பு அரக்கனும், அழகான ராட்சசி ஆனந்தியும் அழகாக்கி விடுகிறார்கள். நடிகர்களில் மிகவும் குறிப்பிட வேண்டியவர் முனிஷ்காந்த். இடைவேளையில் இருந்து படம் நெடுக நொடிக்கு நொடி வெடியின் வீரியம் அவர் கமெண்டில். தோழர் ரித்விகா, தோழி சரண்யா ரவி ஆகியோர் படத்திற்கு பலம் சேர்த்தவர்கள்.
இப்படத்தின் இயக்குநர் அதியன் ஆதிரை இரும்புக்கடையில் வேலை செய்தவர். இரும்புக்கடையில் தொழிலார்களின் வெக்கை நிறைந்த வேலையையும் வேலையில் முதலாளி மூலமாக அவர்கள் சந்திக்கும் நெருக்கடிகளையும் துல்லியமாக பதிவு செய்துள்ளார். ஒருசில நல்ல முதலாளிகளும் இருப்பதை எங்காவது ஊறுகாய் போல் தொட்டிருந்தால் நான் வேலைசெய்த இரும்புக்கடை முதலாளி உள்பட சில நல்ல முதலாளிகள் சந்தோசப் பட்டிருப்பார்கள்.
இந்தக்குண்டை எதனால் நாம் கொண்டாட வேண்டும் என்பதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. அதை வரிசையாக பேசலாம். அதற்கு முன்பாக அவசியம் படத்தைப் பார்த்துவிடுங்கள்!