அடிக்கணும் உடைக்கணும்னு சொல்றதை விட படிக்கணும், ஒடுக்குமுறை நடக்க விடாம தடுக்கணும்னு சொல்ற அரசியல் தான் நமக்குப் பிடித்தமான அரசியல். அசுரன் க்ளைமாக்ஸ் அப்படியொரு அரசியலை முன் வைக்குது. பூமணி எழுதிய வெக்கை நாவல் தான் அசுரன் படம்.
“நாவலை படமா எடுக்குகிறேன்னு நாவல்களை கொலை செய்யுறவங்களுக்கு மத்தியில நாவலை வச்சி ஒரு நல்ல கலை செய்திருக்கிறார் வெற்றி.
தவப்பனும் மவனும் காட்டுக்குள ஓடி ஒழிஞ்சி அம்பாயப்படுவாங்க. அதுக்கு நடுவுல நடுவுல தவப்பன் தான் கதையைப் பூரா மவன்ட சொல்லுவான். அப்பந்தான் மூத்த மவனை காவு வாங்குனது நெலம் வெறிப்பிடிச்ச சாதின்னு தெரிய வரும். அப்படியே விரியுற கதை மனசுல பெரிய வெக்கையை பரவ வைக்கும். இது நாவல்ல வர்ற கதை வடிவம். இதையே தான் திரைப்படத்துக்கு ஏத்த மாதி லேசா மாத்தி செத்தயங் கூட அந்த உணர்வு குறையாம கொண்டு வந்திருக்கிறார் வெற்றிமாறன். அவர் ஒரு தேர்ந்த படைப்பாளி என்பதற்கான சாட்சியா இருக்குற அவரது படங்கள்ல அசுரனுக்கு முக்கியமான இடம் இருக்கும்.
வெற்றிமாறன் ஆக்ஷன் சொல்லும் போது மட்டும் தனுஷுக்குள்ள வேறோர் ஆக்சிஷன் வந்துரும் போல. மனுசன் அந்தப்புழுதிக் காட்ல சண்டைப் போடும் போதும், பெத்த மவனை தலை இல்லாம பாத்ததும் அழும்போதும், திருநெல்வேலில எங்கேயோ பிள்ளையைப் பறிகொடுத்துட்டு நிக்க ஒரு 48 வைசு தவப்பனை கண்ணுல கொண்டாந்து நிப்பாட்டிருக்காரு. இந்த வருச தேசியவிருது தப்பாதுன்னு தான் தோணுது.
சிவசாமியோட மவன் இளையவனை வடக்கூரான் குடும்பம் தெருவுல போட்டு குதறும் போது மாடில நின்னுக்கிட்டே, “ரெண்டு வீட்டு பிரச்சனையை ஊர்ப்பிரச்சனையை ஆக்கிடாதீங்கப்பா”ன்னுசொல்ற வேல்ராஜ் கேரக்டர், தனுஷ் கூட்டம் அரிவா கம்போட வரும்போது மட்டும் கீழ இறங்கி வந்து சத்தம் போடும். அந்தக் கேரக்டர் வழியா வெற்றிமாறன் நடுநிலை பேசுறவங்களுக்குள்ள இருக்க இருட்டை வெளிச்சம் போட்டு காமிக்காரு.
பசுபதி, மஞ்சுவாரியர், பிரகாஷ்ராஜ், பாலாஜிசக்திவேல் ஆடுகளம் நரேன், பவண், டி.ஜே, கென் மாதிரி இன்னும் திரையில வாரவங்க எல்லாரும் நடிகர்களா தெரியாம அந்தக் கேரக்டருவளா தான் மனுசல பதிதாங்க.
ஜீவி பிரகாஷ் பின்னணி இசை அசுரத்தனம். வேல்ராஜ் காட்டி இருக்குற திருநெல்வேலி திருநெல்வேலி மாதிரி இல்லாம திருநெல்வேலியாகவே இருக்கு.
திருநெல்வேலி பாசையை சரியா கையாண்ட படங்கள்ல அங்காடித்தெரு, பாபநாசம், நெடுநல்வாடை, பரியேறும் பெருமாளுக்கு அடுத்து அசுரனும் தரம். திருநெல்வேலியைப் பொறுத்தவரைக்கும் ஒவ்வொரு சாதிக்கும் ஒரு பேச்சுமொழி உண்டு. அம்மன்னு சொன்னா ஒரு சாதி, ஆத்தான்னு சொன்னா ஒரு சாதி. ஆனா இதுல அப்படி தனிமைப்படுத்தாம பொதுவா தான் மொழியை நுழைச்சிருக்காங்க. அது சரியாவும் இருக்கு. “பாத்துவால..கல்லுகில்லு கெடக்கப் போது”
“கக்கிட்டாரு பாரு” இதுலாம் சாம்பிள்.
பள்ளியோடம் போற பிள்ள செருப்பு போட்டதுக்காண்டி செருப்பை அந்தப்பிள்ள தலயில வச்சி நடக்கச் சொல்லி எட்டி எட்டி மிதிக்க சீனைப் பாக்கும் போது ஈரக்கொலைப் பூரா வேவத்தான் செய்யும் எல்லாருக்கும்.
மவன் நல்லாருக்கணும்னு ஊர்க்காரன்வ கால்ல தவப்பன் சிவசாமி விழும்போதும் மனசு வலிக்கத்தான் செய்யும். சவம் இதுலாம் அந்தக்காலத்துல நடந்துதுப்பா..இப்பம் ஏன் இதெல்லாம் காட்டணும்னு கேட்டா, “இதை இன்னைக்கே தலைமுறைக்கு கண்டிப்பா கொண்டு போணும்னு தான் சொல்வோம். ஏன்னா இப்பம் எங்கேயுமே இதை மாதிரி கொடுமை நடக்கலன்னு யாராலும் கற்பூரம் அடிக்க முடியாது. அதோட படம் முடிவுல பாதிக்கப்பட்டவன் எதை தேர்ந்தெடுக்கணும்னு தெளிவா சொல்லுது”
வெற்றிமாறனுக்குள்ள இருக்குற படைப்பாற்றலும் சமூகப்புரிதலும் கொண்ட 25 இயக்குநர்கள் இருந்தா நிச்சயமா நம்ம படங்களுக்கான மதிப்பும் மரியாதையும் உசரத்துல இருக்கும்
அசுரனை தவறவே விட்றாதீங்க